இந்திய அரசு, சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா

விருதை அறிவித்திருக்கிறது. நண்பர் ஒருவர் கூறியபடி, ராவ் யார் என்பதே 99
சதவீத இந்தியர்களுக்குத் தெரியாது. இவ்வாறு சொல்வதால், அவரது புகழை நான்
குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியர்கள் அறிவியல்மீது
எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
பேரறிஞர்
79 வயதான ராவின் சாதனை உலக அளவில் மெச்சப்படுகிறது. வேதியியல் துறையிலும்
நானோடெக்னாலஜி துறையிலும் 1,500 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 45
புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹெர்ஷ் அளவீடு (ஹெர்ஷ் இண்டெக்ஸ்) என்று
ஒன்று உலகம் முழுவதும் கையாளப்படுகிறது. இது விஞ்ஞானி ஒருவர் எழுதும்
ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவு மற்ற விஞ்ஞானிகளால் கவனிக்கப்படுகின்றன
என்பதைக் குறிக்கும். இதன்படி, ராவின் அளவீட்டு எண் 93+. இவரது கட்டுரைகள்
44,000 முறை விஞ்ஞானிகளால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே
இந்த அளவு உலக விஞ்ஞானிகளால் கவனம் பெற்றவர் இவர் ஒருவர்தான்.
காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராவ்
அமெரிக்காவில் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் முனைவருக்கான ஆராய்ச்சி செய்தார்.
பின்னர், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியைத்
தொடர்ந்தார். 1959-ம் ஆண்டு இந்தியா திரும்பியதும் இந்திய அறிவியல்
கழகத்தில் (ஐஐஎஸ்சி) சேர்ந்தார். பின்னர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக்
கழகத்தில் பணிபுரிந்தார். 1984-ம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தின்
தலைவராகப் பதவியேற்ற அவர், அங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு முதுநிலை
அறிவியல் ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் நிறுவியவர் இவரே. மையத்தின்
தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக்
குழுவின் தலைவராகவும் பல ஆண்டுகள் இயங்கினார். ராவுக்கு பாரத ரத்னா விருது
வழங்கப்பட்டதன் காரணங்களில் இரண்டைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, இவர்
அறிவியல் நிறுவனங்களைக் கட்டமைத்தது. மற்றது, அவை திறமையாக இயங்க
உறுதுணையாக நின்றது. நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் ராவை இருமுறை
சந்தித்திருக்கிறேன். எளிமையானவர். அதிகம் பேசாதவர். செய்வதைத் திறமையாக,
தவறேதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு
செய்யவில்லை என்றால், மிகுந்த கோபம் கொள்வார் என்று அவரிடம் பணிபுரிந்த
சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவரது மேற்பார்வையில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று, கருத்துத் திருட்டு
சம்பந்தமாக, சென்ற ஆண்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பழியைத் தனது
மாணவர்மீது போட்டு, தான் தப்பித்துக்கொள்ள முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு
இவர்மீது வைக்கப்பட்டது. ஆனால், இவருடைய திறமையைப் பற்றி யாருக்கும்
சந்தேகம் கிடையாது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி
நிறுவனங்களும் அரசுகளும் இவரைக் கௌரவித்துள்ளன.
இந்தியாவில் அறிவியலின் நிலைமை
இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் இருப்பதே இத்தனை நாளும் நம்மில் பலருக்குத்
தெரியாதது இந்தியாவில் அறிவியலின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதையே
காட்டுகிறது. “இந்திய அறிவியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுப்
பல நாட்கள் ஆகிவிட்டன. நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது” என்று
அறிவியல் அமைச்சகத்தில் பணிபுரியும், தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி
ஒருவர், சில நாட்களுக்கு முன்னால்தான் என்னிடம் கவலையோடு சொன்னார். நாடு
முழுவதும் அறிவியல் துறையில் சேர்ந்து படிப்பவர்களில் திறமையானவர்களின்
எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பக் கல்விதான்
வேலைவாய்ப்புகளைத் தரும் என்ற மந்தைபுத்தி இளைய தலைமுறையினரை
அறிவியலிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது.
ராவின் ஹெர்ஷ் அளவீட்டு எண் 93+ என்று சொன்னேன். இந்தியாவிலேயே
முதன்மையானது அவருடையதுதான் என்று எண்ணுகிறேன். ஆனால், உலக அளவில்
ஒப்பிடும்போது இவரது சாதனை பெரும் உயரத்தில் இருக்கிறது என்று சொல்ல
முடியாது. வேதியியல் துறையிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ்
வைட்சைட்ஸ் என்பவர் 169 பெற்று முதல் நிலையில் இருக்கிறார்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சியை உலகம் எப்படி மதிப்பிடுகிறது?
உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழான ‘நேச்சர்’, ஒவ்வொரு ஆண்டும் அது
வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது.
2012-ம் ஆண்டின் அறிக்கை சமீபத்தில் வந்தது. அது தந்திருக்கும்
புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றன. ‘நேச்சர்’
இதழ்களில் 2,236 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு, அமெரிக்கா முதலிடம்
வகிக்கிறது. சீனாவுக்கு ஆறாவது இடம். இந்தியாவின் இடம் 24. உலகின்
முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலையும் அது
வெளியிட்டிருக்கிறது. 200 நிறுவனங்கள்! ஒன்றுகூட இந்தியாவிலிருந்து இல்லை.
சீனத்தின் ஒன்பது நிறுவனங்கள் பட்டியலில் இருக்கின்றன. இதைவிட ஆச்சரியம்
தரக்கூடிய தகவல் என்னவென்றால், எதிர்காலத்தில் அறிவியல் துறையில்
கவனிக்கப்பட வேண்டியவை என்று ஐந்து நாடுகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இவை சீனா, அயர்லாந்து, பிரேசில், கென்யா, மற்றும் சவூதி அரேபியா. இந்தியா,
கணக்கிலேயே வரவில்லை. ஆசியாவில்கூட, இந்தியா ஏழாவது இடத்தில் தைவானுக்கும்
சிங்கப்பூருக்கும் பின்னால் இருக்கிறது. மொத்த அறிக்கையில் இந்தியாவின்
பெயர் இரண்டு இடங்களில்தான் வருகிறது.
வழிதான் என்ன?
இந்த அறிக்கையை வைத்து இந்திய அறிவியலைக் குறைத்து அளவிட முடியாது என்று
சொல்வதில் சிறிது உண்மை இருக்கிறது. ஆனால், பிரச்சினைகளையும் குறைத்து
அளவிட முடியாது. துடிப்பான பல ஆராய்ச்சியாளர்களிடம் நான் பேசியிருக்கிறேன்.
ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், இந்திய அறிவியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும்
அரசு நிறுவனங்களுக்கும், இளைய தலைவர்கள் வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
பெரியவர்கள் வெளியில் நின்று ஆலோசனை வழங்கலாம். ஆனால், நேரடி நிர்வாகத்தில்
அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இளைய
விஞ்ஞானிகளின் குரல்கள் அரசுக்குச் சென்றடைய எந்த ஒரு சாதனமும் இல்லை
என்பதும் உண்மை. எனவே, வெளிநாடுகளிலிருந்து கனவுகளோடு வந்த பலர், திரும்பச்
சென்றுவிட்டனர்.
எதிர்காலம்
சுடர்மிகும் அறிவு படைத்த இளைஞர்களை அறிவியலை நோக்கி வரச் செய்வதே நாம்
இன்று செய்ய வேண்டியது. இதை மிக முனைப்போடு செய்துவருபவர் நமது அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ராமசாமி அவர்கள்.
தமிழகத்தைச் சார்ந்தவர். இவரால் கொண்டுவரப்பட்ட ‘இன்ஸ்பையர்’ திட்டம்
நாடெங்கும் போற்றப்படுகிறது. 10 வயதில் தொடங்கி 32 வயது வரை அறிவியல்
துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில்
உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்காமலே
இன்று ஒரு திறமையான மாணவனால் அறிவியலில் உயர்கல்வி பெற முடியும்.
தமிழகத்தில் இந்தத் திட்டம் அதிகக் கவனிப்புப் பெறாதது ஆச்சரியத்தை
அளிக்கிறது.
சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி,
இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்பும் என்று நம்புகிறேன். குறிப்பாக, தமிழக
இளைஞர்களை.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற நால்வரில் மூவர்
தமிழர்கள் என்பதை நமது இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com