Sunday, December 29, 2013

2013 டாப் 10 தமிழ் மனிதர்கள்

நீதித் தமிழ்!
ழக்கறிஞராக 20 ஆண்டுகள், சீனியர் கவுன்சிலராக 10 ஆண்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏழு ஆண்டுகள் பொறுப்பு வகித்த சந்துரு, 2013 மார்ச்சில் ஓய்வுபெற்றார்.
ஏழு ஆண்டுகளில் 96 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளித்தது, அர்த்தமுள்ள ஒரு சாதனை. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடித்துத் தள்ள உத்தரவிட்டது, கோயில்களில் பெண்கள் பூசாரிகளாகப் பணியாற்றலாம் என்று தீர்ப்பளித்தது, 'பெரியார் அனைவருக்கும் பொதுவானவர்’ என்று அவரின் படைப்புகளை பொதுவுடைமை ஆக்கியது என, தன் பணிக்காலம் முழுக்க நீதியை நிலைநாட்டினார் சந்துரு.
கிட்னி பழுதான டாஸ்மாக் ஊழியர் தொடுத்த வழக்கில், 'மக்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும் மறைமுகமாகப் பாழ்படுத்தும் டாஸ்மாக் நிறுவனம், மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. ஆனால், அதன் ஊழியரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள மறுப்பது தொழிலாளர் நல சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி, அந்த ஊழியரின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.
ஒரு நீதிபதியாகத் தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார் சந்துரு. நீதிபதியாகப் பொறுப்பேற்ற மேடையிலேயே தன் சொத்துக் கணக்கை வெளியிட்டு, இந்திய நீதித் துறைக்கு முன்மாதிரி ஆனார். நீதிபதிக்கு முன்பாக வெள்ளைச்   ச¦ருடை ஊழியர்கள், செங்கோல் ஏந்தி 'உஷ்’ என்று சத்தம் எழுப்பிக்கொண¢டு செல்லும் நடைமுறையை நிராகரித்தார். தன் நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதியை 'மை லார்ட்...’ என்று அழைக்கத் தேவை இல்லை என்று உத்தரவிட்டார். ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான பிரிவு உபசார விழாவைக்கூட மறுத்து, 'இத்தகைய சடங்குகள் வீண் செலவு’ என்று தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி விடைபெற்றார். வழக்காடிய கனல் காலங்கள், வழங்கிய கனல் தீர்ப்புகளைப் போலவே, ஓய்வுக்குப் பிறகான கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் அருமைத் தமிழன்... நம் பெருமைத் தமிழன்!
 'விண்’ணர்!
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்’ திட்டத்தின் தூண், சுப்பையா அருணன்! அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய வியூகம் வகுத்த வியத்தகு அறிவியல் தமிழன்.
'மங்கள்யான்’ திட்ட இயக்குநரான இவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் கோதைச்சேரி சொந்த ஊர். 'சந்திராயனில்’ திட்டத் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு... மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியவர் அருணன். மிகுந்த சிக்கலான, பல நாடுகளில் பல்வேறு கட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த 'மார்ஸ் மிஷன்’ திட்டத்தை மிகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் அருணன், இந்தியர்களின் அறிவியல் தீரத்தை பூமி தாண்டி மேலே, உயரே, உச்சியிலே பறக்கச் செய்கிறார்!
அற்புதம் அம்மா!
வியர்த்துக் களைத்த உருவம், காலில் ரப்பர் செருப்பு, தோளில் ஒரு துணிப்பை... ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் அடையாளம் இவைதான்.
22 ஆண்டுகளாக ஒற்றை மனுஷியாக தன் மகனின் உயிரைக் காப்பாற்ற உண்ணாது, உறங்காது ஊரெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார். பேரறிவாளனின் 'தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலை ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு தங்கள் தரப்பு அரசியல் நியாயத்தை உலகம் அறியச் செய்தார்.
இந்தியா முழுவதிலும் உள்ள 14 தூக்குக் கைதிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் மொத்தமாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், தன் மகனை நிரபராதி என்று நிரூபிக்க நம்பிக்கைக்குரிய காய் நகர்த்தல்களைச் செய்திருக்கிறார் அற்புதம் அம்மாள். அதில் விழுந்த கடைசிக் கல்தான் சி.பி.ஐ. முன்னாள் எஸ்.பி., தியாகராஜனின் வாக்குமூலம். ஒரு போலீஸ் அதிகாரியின் மனசாட்சியில் உறைந்திருந்த குற்ற உணர்ச்சியை, மெதுமெதுவாகக் கரைத்து வெளியே கொண்டுவந்தது அற்புதம் அம்மாளின் இடைவிடாத போராட்டம். இவரது உழைப்பின் பயனாக, மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரத்தில் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது!
குரு தெய்வம்!  
ஓர் ஆசிரியர் நினைத்தால் பள்ளிக்கூடத்தை மட்டுமா, அங்கு பயிலும் மாணவர்களை மட்டுமா... ஒரு கிராமத்தையே  மாற்றிக் காட்டலாம் என நிரூபித்திருக்கிறார் கருப்பையா. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையா, 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் சுகாதார வசதிகள் இல்லாமல், படிப்பறிவு பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருந்த கிராமத்தைத் தலைகீழாக மாற்றியிருக்கிறார். ஊரில் கூட்டம் நடத்தி இளைஞர்களை அணிசேர்த்தவர், அதிகாலையில் டார்ச் லைட்டுடன் சத்தம் எழுப்பிக்கொண்டே வலம்வந்து திறந்தவெளியை மக்கள் கழிப்பறையாகப் பயன்படுத்துவதைக் குறைத்தார்.
மானியம் பெற்று கிராமத்தில் கழிப்பறைகள் கட்டியவர், 'சுகாதாரமான கிராமம்’ என்று அந்தக் கிராமம் பரிசு பெறச் செய்தார். பள்ளி மாணவர்களுக்குத் தலைமைப் பண்புகளைக் கற்றுத்தந்தார். பள்ளியை கணினிமயப்படுத்தினார். இப்போது இந்தப் பள்ளியின் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வலைப்பதிவு எழுதுகின்றனர். பின்தங்கிய நிலையில் மண்ணாக மட்கிக்கிடந்த ஒரு பள்ளியை, குன்றிலிட்ட விளக்காக ஜொலிக்கவைத்த கருப்பையாவுக்கு, மேளதாளம் முழங்க 100 தட்டுகளில் சீர்வரிசை வைத்து, 'கல்விச்சீர்’ கொடுத்து நெகிழ்ச்சி நன்றி செலுத்தினர் நெடுவாசல் வடக்கு ஊர் மக்கள்!
தோள் கொடுக்கும் தோழி!
தேவகோட்டை அருகேயுள்ள 'ஓரிக்கோட்டை’ என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வசிக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தனமேரி. சாதி ஆதிக்கத்தின் சகல கூறுகளாலும் ஒடுக்கப்பட்ட சந்தனமேரியின் மனதினுள் கனன்ற நெருப்புக் கனல், அவரை கம்யூனிஸ்ட் ஆக்கியது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கம் ஒன்றில் இணைந்தார்.
தேவகோட்டை, காளையார்கோயில், ஆவணம் கைகாட்டி பகுதிகளில் இவரது ஒருங்கிணைப்பில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு கணக்கு இல்லை. தன் சொந்த ஊரான ஓரிக்கோட்டையில் உள்ள தலித்கள், 'சாவுக்குக் கேதம் சொல்வது, பறை அடிப்பது, செத்த மாடு தூக்குவது... போன்ற அடிமை வேலைகளை இனி செய்ய மாட்டார்கள்’ என அறிவித்து, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 'உழைக்கும் பெண்கள் இயக்கம்’ அமைத்து அதன் மூலம் சுற்றிச் சுழலும் சந்தனமேரி, எந்த அதிகாரத்துக்கும் அரசுக்கும் அஞ்சாத மேரி!
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் வாலிபர்களே!  
விறுவிறு வளர்ச்சியில் தமிழ்த் திரையின் தவிர்க்க முடியாத நாயகர்களாக உயர்ந்திருக்கிறார்கள் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்!
'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்ற சாதாரண வசனம், விஜய் சேதுபதியிடம் இருந்து வரும்போது பன்ச் டயலாக் ஆகிவிடுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத, சினிமாவுக்கே உரிய பில்டப் ஏதும் இல்லாத விஜய் சேதுபதி, இந்த ஆண்டு தொட்டது எல்லாம் ஹிட். 'நாளைய இயக்குநர்கள்’ அத்தனை பேரின் விருப்ப நாயகனாக இருக்கும் இந்த 'சுமார் மூஞ்சி குமார்’, சின்சியர் சினிமாக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதால், சினிமாவே ஹேப்பி அண்ணாச்சி!
குபீர் ஹீரோவாகக் கிளம்பி தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் கலெக்ஷனில் கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்கள் சிவாவின் கால்ஷீட்டுக்கு வரிசை கட்டுகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ், டீனேஜ் பட்டாளம், 'சி’ சென்டர்... என அத்தனை பேரையும் பாக்கெட் செய்கிறது சிவகார்த்திகேயனின் மெஸ்மரிசம். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முன்னணி இடம் பிடித்திருக்கும் இவரது ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒளிந்திருக்கிறது கடும் உழைப்பு!
சுயமரியாதைமிக்க பக்தர்!
தில்லை சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமைக்காகக் களம் கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வர் பாடிய தேவாரத்தை, உலக சைவர்களின் ஒரே கோயிலான சிதம்பரம் கோயிலில் பாடும் உரிமையை நீதிமன்ற உத்தரவு மூலம் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது முதலுக்கே மோசம் வந்திருக்கிறது. சிதம்பரம் கோயிலின் உரிமை தொடர்பான வழக்கில், '45 ஏக்கர் கோயிலும், கோயிலுக்குச் சொந்தமான 2,500 ஏக்கர் நிலமும் எங்களுக்கே சொந்தம்’ என்கிறார்கள் தீட்சிதர்கள்.
வழக்கு விசாரணைகளில் தமிழக அரசு ஒப்புக்குச் சப்பாணியாக வாதாடி, கோயிலை தீட்சிதர்களுக்கே விட்டுக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தபோது... ஆறுமுகசாமி அதிரடியாக தில்லைக் கோயிலில் நுழைந்தார். கொட்டும் மழையில் சிற்றம்பல மேடையேறி 'சாகும் வரை தேவாரம் பாடும்’ போராட்டத்தை அறிவித்து, காவல் துறையினரின் நெருக்கடிகளைத் துணிவுடன் எதிர்கொண்டார். ஆறுமுகசாமியின் உடலுக்கு வயதாகலாம். அவரது சுயமரியாதைத் தாண்டவத்தை சிதம்பரம் மறக்காது!
தொல்லியல் வேந்தன்!
ந்திய தொல்லியல் துறை கொண்டாடும் மகத்தான மனிதர் பேராசிரியர் ராஜன். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜன், தன் ஆய்வு மாணவர்களோடு பழநி அருகே 'பொருந்தல்’ என்ற கிராமத்தில் மேற்கொண்ட அகழாய்வு, பல புதிய திறப்புகளை வழங்கியுள்ளது. ஒரு ஜாடியில் இருந்த இரண்டு கிலோ நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு.490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், தமிழர்களின் நெல் விவசாயப் பாரம்பரியம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நிரூபித்தது. அதே ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்பாண்டம் ஒன்றில் 'வயிர’ என்ற தமிழ் பிராமி எழுத்துகள் இருந்துள்ளன. இதன் மூலம் தமிழ் வரி வடிவத்தின் தொன்மை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர் ராஜனும், அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய மற்றோர் அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில், இரும்பு, எஃகு உருக்கு ஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...’ என்பதை வெறுமனே இலக்கியப் பெருமிதமாகப் பேசித் திரிந்ததை வரலாற்று ஆவணங்களுடன் நிரூபித்த ராஜனின் பணி மகத்தானது!
எருக்கம்பூ கலகக்காரர்!
முழுநேர விவசாயப் போராளி சுந்தர விமலநாதன். காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளரான இவர், விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால், துயர் துடைக்க முதல் ஆளாக நிற்பார். தூர் வாரியதாகச் சொல்லி துட்டு வாரியவர்களையும், குளம் வெட்டியதாகச் சொல்லி பைசா அள்ளியவர்களையும், மதகு கட்டியதாகச் சொல்லி மாடிவீடு கட்டியவர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்திவருபவர். 'சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு பூச்செண்டு கொடுப்பது எங்கள் வழக்கம். நீங்களோ மிகமிக மோசமாகச் செயல்படுகிறீர்கள். எனவே, உங்களுக்கு நினைவுப் பரிசாக இந்த எருக்கம்பூவைத் தருகிறோம்’ என்று சபைகளில் வைத்து அதிகாரிகளைக் கலங்கடிக்கும் கலகக்காரர்.
விவசாயக் கடன் தள்ளுபடியானாலும், விவசாய வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் என்றாலும் அங்கே சுந்தர விமலநாதன் ஆஜராவார். விவசாயிகளின் பிரச்னைகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட இவர், திருமணமே செய்துகொள்ளவில்லை!
மண்புழு விஞ்ஞானி!
டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னை, புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பயோடெக்னாலஜி துறைத் தலைவர். 'மண்புழு விஞ்ஞானி’ என்பதுதான் அவரது நிரந்தர அடையாளம். இப்போது உலக அளவில் மண்புழு உரம் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகக் கடந்த 20 வருடங்களாக ஆய்வுசெய்து அப்போதே மண்புழு உரத்தை உருவாக்கியவர்!
மண்புழு உரத் தொழில்நுட்பத்தைக் குறிக்க 'வெர்மி டெக்’ என்ற வார்த்தையை உருவாக்கிய இவர், உலகம் முழுக்கப் பயணித்து மண்புழு உரத்தின் பெருமைகளை உரக்கப் பேசிவருகிறார். இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுபவர், பள்ளிக் குழந்தைகளுக்கு 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாகப் பயிற்றுவிக்கிறார். அந்த அடிப்படை செய்முறை அறிவியலை தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் பொறுப்பை மத்திய அரசு இவரிடமும் ஒப்படைத்துள்ளது. கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களைச் செழிக்கச் செய்திருக்கிறார் இஸ்மாயில்!
Source:விகடன் டீம்

Saturday, December 21, 2013

ஏன் ஒருதலைபட்சமான கோபம்?





வீட்டுப் பணிப்பெண்ணுக்குச் சட்டப்படி அளிக்க வேண்டிய ஊதியத்தை அளிக்காததால், அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி கோபர்கடே விவகாரம் இந்திய ஊடகங்களில் சமீப நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
ஒரு தூதரக அதிகாரிக்கான அந்தஸ்தை அளிக்காமல், கையில் விலங்கு போடப்பட்டு ஒரு சாதாரணக் குற்றவாளிபோல நடத்தப்பட்டார் என்று இந்திய அரசு அமெரிக்க அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.
ஒருமித்த குரல்
அமெரிக்க அரசு, இந்தியத் தூதரக அதிகாரியை நடத்திய விதத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான சிறப்புச் சலுகைகளை உடனடியாக ரத்துசெய்துள்ளது.
டெல்லி அமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் முன்பு வாகனங்கள் விடுவதற்காக இருந்த சிறப்புத் தடுப்புகளை அகற்றியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தேவயானி சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'சாதாரண' பணிப்பெண் விவகாரம்
ராகுல் காந்தி, அமெரிக்க அரசைக் கண்டிக்கும் விதமாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சம்பிரதாய சந்திப்பைக் கூட மறுத்திருக்கிறார். நரேந்திர மோடி ஒருபடி மேலாகச் சென்று, இந்த விவகாரத்தில் தேசபக்தி அரசியலைக் கிளப்பினார்.
"தேவயானியை இந்தியா அழைத்துவர முடியாவிட்டால், நாடாளுமன்றத்தின் படியேற மாட்டேன்" என்று சபதம் போட்டிருக்கிறார் சல்மான் குர்ஷித்.
"ஒரு 'சாதாரண' வீட்டுப் பணிப்பெண் விவகாரத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா? வெறும் சம்பளக்கூலி தொடர்பான விஷயம் ஒரு குற்றமா?" என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கொந்தளிக்கிறார்.
உயர் அந்தஸ்துள்ள இந்திய அதிகாரிக்கு அவமானம் இழைக்கப்பட்டுவிட்டது என்ற கோபம்தான் இங்கு பெரும்பாலும் பிரதிபலிக்கிறது. இந்தியத் தூதரக அதிகாரி தேவயானியைக் கைதுசெய்யும்போது நேரிட்ட அடிப்படை மனித உரிமை மீறல்களும் அமெரிக்காவின் அத்துமீறல்களும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவை. இது தொடர்பான நம்முடைய கோபம் நியாயமானது; ஆனால், ஏன் அந்த கோபம் பாதிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண் விஷயத்திலும் நீளவில்லை?
இந்தியத் தூதரக அதிகாரியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணிப்பெண்ணும் இந்தியர்தான். அமெரிக்கச் சட்டத்தின்படி, வீட்டுப் பணிப்பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டிய குறைந்தபட்சக் கூலியைவிடக் குறைவாக அளித்து, சொல்லப்பட்டதைவிட அதிக நேரம் வேலையையும் அவர் செய்யவைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 'உரிமைகளற்ற குடிமக்களாக' கருதப்படும் வீட்டுப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை அமெரிக்கச் சட்டங்கள் உறுதிசெய்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்கா போன்ற நாட்டிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.
முன்னுதாரணங்கள்
வீட்டுப் பணியாளர்களை இந்தியர்கள் வெளிநாட்டில் முறைகேடாக நடத்தியதற்காகத் தண்டனைக்குள்ளாகும் முதல் வழக்கு அல்ல இது. 2011-ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் தலைமைத் தூதர் பிரபு தயாள், கட்டாய வேலைக்குத் தனது பணியாளை உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க் தூதரகத்தில் பணியாற்றிய இந்திய ஊடக, கலாச்சார ஆலோசகர் நீனா மல்ஹோத்ரா, தனது பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதற்காக 1.5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டார்.
இவர்களைப் போன்ற வசதியுடையவர்கள், தங்கள் வீட்டுப் பணியாளர்களை நடத்தும் விதம் எதுவும் இந்தியாவில் குற்றமே அல்ல. உடல் உழைப்புப் பணிகள் மற்றும் வீட்டுப் பணிகள் செய்பவர்கள் மூன்றாம் தரக் குடிமக்களாகத் தொன்றுதொட்டு நடத்தப்படும் நாடு இது.
கொத்தடிமைத் தொழிலாளர்கள் தொடர்பாக உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் நவீனக் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1.5 கோடி தொழிலாளர்கள் எஜமானர்களால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக உலக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 'நியாயமான கூலி வழங்கல் தரச் சட்ட'த்தின்படி குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் பணிநேர ஊதியம், தொழிலாளர் விவரங்களைப் பேணுதல், குறைந்தபட்ச வாழ்க்கைத்தரம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலைத் தூதரக அதிகாரி தேவயானியை, மோசமாக நடத்தியதாகக் கூறும் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ஏன் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விஷயங்கள்குறித்துப் பொருட்படுத்துவதுகூட இல்லை?
தொழிலாளர் விஷயத்தில் கோபம் வராதா?
சென்னை போன்ற பெருநகரங்களில் வடமாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து அடிப்படை வசதிகள், சம்பளம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு மறுக்கப்பட்டு வாழும் தொழிலாளர்கள் விஷயத்தில் ஏன் இத்தனை கோபம் இந்தியத் தலைவர்களுக்கு எழுவது இல்லை?
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்கள் இன்னும் சேர்க்கப்படவே இல்லை. இந்தியாவில் கர்நாடகமும் கேரளமும் மட்டுமே வீட்டுப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தைக் குறைந்தபட்சம் 191 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. மற்ற மாநில அரசுகள் அதைக்கூட இன்னும் நிர்ணயிக்க முன்வரவில்லை.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அடிமட்டத் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களை நாம் நடத்தும் விதம், கொடுக்கும் சம்பளம், அவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து நாம் நமது இதயம் திறந்து பரிசீலிக்கவும் விவாதிக்கவும் வேண்டும்.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@kslmedia.in

Monday, November 18, 2013

டீக்கடையாகும் ட்விட்டர்: அஜித் X விஜய்

ஹேஷ்டேக் (#) - ட்விட்டரில் பயன்படுத்தப்படும் குறியீடு, இணைய உலகில் ஒரு ஆயுதமாகவே உருவெடுத்திருக்கிறது. துனீசிய எழுச்சி உள்ளிட்ட நிகழ்வுகளில் இக்குறியீட்டின் பங்கு மிகப் பெரியது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, அதன்மூலம் ட்விட்டரில் குறும்பதிவுகளை வெளியிட்டு, அதை வைத்துப் புதுப்போக்குகளை உருவாக்குவார்கள். நொடிக்கு ஏராளமான பதிவுகள் இடப்படும்போது, அதுசார்ந்த ஹேஷ்டேக்குகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்.
தமிழ் இணையவாசிகளில் இதை அதிக அளவில் பின்பற்றுபவர்கள் சினிமா ரசிகர்கள் தான். அஜித்தின் 'ஆரம்பம்' அறிவிப்பு வெளியானதிலிருந்து, தமிழ்ச் சூழலில் ஹேஷ்டேக்கை கேலிப்பொருளாக்கிவிட்டார்கள். அவ்வப்போது அந்தப் படம் பற்றிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, இந்திய அளவில் ஒரு போக்கை உருவாக்கிவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
இங்கேதான் ‘புரட்சி’ வெடிக்கத் தொடங்குகிறது. விஜயைக் கிண்டல் செய்து ஹேஷ்டேக் உருவாக்கி, அதனையும் இந்திய அளவில் பிரபலப்படுத்திவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.
'ஆரம்பம்' வசூல், 'துப்பாக்கி'யின் வசூலை 4 நாட்களில் தாண்டிவிட்டது என்ற பொருளாதாரப் புரட்சியைக் கூறும் #ArrambamDitchesThuppakkiCollectionsInJust4Days என்ற ஹேஷ்டேக் தேச அளவில் பிரபலமானது.
'பில்லா 2' கிண்டல் செய்யப்பட்டதற்குப் பழி தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட #Arrambam rapedvijayfans என்ற ஹேஷ்டேக் உலகுக்கு என்ன சேதி சொல்கிறது? அதுவும் தேச அளவில் பிரபலமானது.
100 கோடி வசூல் செய்தது 'துப்பாக்கி' என்று விஜய் ரசிகர் ஒருவர் பதிவிட, வெகுண்டெழுந்த அஜித் சமூகம் #VijayfansAnd100cComedyABetterLoveStoryThanTwilight என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அர்ச்சனை செய்தனர்.
#ThuppakkiNothingfrontofalwar #POKKIRI LOSES TOANJENEYA என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹேஷ்டேக்குகள் தமிழர்களின் விவாதப் பொருள்களை உலகுக்கு எடுத்துரைத்தன.
'இருங்கடீ, ஜில்லா டீஸர் ரிலீஸ் ஆகட்டும்... உங்களை வெச்சிக்கிறோம்' என்று நெஞ்சு பொறுக்காமல் ட்விட்டரில் காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். பழிதீர்க்கும் தருணமாம் அது. ஹேஷ்டேக் என்பது உலக அளவில் மிகப் பெரிய ஆயுதமாகக் கருதப்படுகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினை, சமச்சீர்க் கல்வி, சட்டமன்றத் தேர்தல், கூடங்குளம், மீனவர் படுகொலைகள், காமன்ல்வெத் மாநாடு... இத்தகைய விவகாரங்கள் உச்சத்தில் இருக்கும்போதுகூட, தமிழகப் பிரச்சினைகள் சார்ந்த ஹேஷ்டேக்குகள் தேச அளவில் பிரபலமாவது இல்லை.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்குக்கூட ஹேஷ்டேக்கைப் பெரிதாகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், தமிழ்ச் சூழலிலோ இணையத்தில் ஆதிக்கம் காட்டும் அஜித், விஜய் ரசிகர்கள் தங்கள் போராட்டத்தால் தமிழருக்குப் புகழ் சேர்த்துவருகின்றனர்.
தைத் திருநாளில் தமிழரின் பெருமையை உலகம் அறிய மற்றோர் வாய்ப்பு பிரகாசமாகக் காத்திருக்கிறது. ஆம், அன்றுதான் விஜயின் 'ஜில்லா', அஜித்தின் 'வீரம்' ஒரே நாளில் ரிலீஸ். 
தொடர்புக்கு: esakkimuthuk@gmail.com

Sunday, November 17, 2013

பாரத ரத்னா ராவ் யார் என்பதே 99 சதவீத இந்தியர்களுக்குத் தெரியாது


இந்திய அரசு, சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்திருக்கிறது. நண்பர் ஒருவர் கூறியபடி, ராவ் யார் என்பதே 99 சதவீத இந்தியர்களுக்குத் தெரியாது. இவ்வாறு சொல்வதால், அவரது புகழை நான் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியர்கள் அறிவியல்மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
பேரறிஞர்
79 வயதான ராவின் சாதனை உலக அளவில் மெச்சப்படுகிறது. வேதியியல் துறையிலும் நானோடெக்னாலஜி துறையிலும் 1,500 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 45 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹெர்ஷ் அளவீடு (ஹெர்ஷ் இண்டெக்ஸ்) என்று ஒன்று உலகம் முழுவதும் கையாளப்படுகிறது. இது விஞ்ஞானி ஒருவர் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவு மற்ற விஞ்ஞானிகளால் கவனிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும். இதன்படி, ராவின் அளவீட்டு எண் 93+. இவரது கட்டுரைகள் 44,000 முறை விஞ்ஞானிகளால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே இந்த அளவு உலக விஞ்ஞானிகளால் கவனம் பெற்றவர் இவர் ஒருவர்தான்.
காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராவ் அமெரிக்காவில் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் முனைவருக்கான ஆராய்ச்சி செய்தார். பின்னர், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1959-ம் ஆண்டு இந்தியா திரும்பியதும் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) சேர்ந்தார். பின்னர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பணிபுரிந்தார். 1984-ம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அவர், அங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு முதுநிலை அறிவியல் ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் நிறுவியவர் இவரே. மையத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பல ஆண்டுகள் இயங்கினார். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதன் காரணங்களில் இரண்டைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, இவர் அறிவியல் நிறுவனங்களைக் கட்டமைத்தது. மற்றது, அவை திறமையாக இயங்க உறுதுணையாக நின்றது. நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் ராவை இருமுறை சந்தித்திருக்கிறேன். எளிமையானவர். அதிகம் பேசாதவர். செய்வதைத் திறமையாக, தவறேதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு செய்யவில்லை என்றால், மிகுந்த கோபம் கொள்வார் என்று அவரிடம் பணிபுரிந்த சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவரது மேற்பார்வையில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று, கருத்துத் திருட்டு சம்பந்தமாக, சென்ற ஆண்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பழியைத் தனது மாணவர்மீது போட்டு, தான் தப்பித்துக்கொள்ள முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது வைக்கப்பட்டது. ஆனால், இவருடைய திறமையைப் பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அரசுகளும் இவரைக் கௌரவித்துள்ளன.
இந்தியாவில் அறிவியலின் நிலைமை
இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் இருப்பதே இத்தனை நாளும் நம்மில் பலருக்குத் தெரியாதது இந்தியாவில் அறிவியலின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. “இந்திய அறிவியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது” என்று அறிவியல் அமைச்சகத்தில் பணிபுரியும், தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், சில நாட்களுக்கு முன்னால்தான் என்னிடம் கவலையோடு சொன்னார். நாடு முழுவதும் அறிவியல் துறையில் சேர்ந்து படிப்பவர்களில் திறமையானவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பக் கல்விதான் வேலைவாய்ப்புகளைத் தரும் என்ற மந்தைபுத்தி இளைய தலைமுறையினரை அறிவியலிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது.
ராவின் ஹெர்ஷ் அளவீட்டு எண் 93+ என்று சொன்னேன். இந்தியாவிலேயே முதன்மையானது அவருடையதுதான் என்று எண்ணுகிறேன். ஆனால், உலக அளவில் ஒப்பிடும்போது இவரது சாதனை பெரும் உயரத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. வேதியியல் துறையிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் வைட்சைட்ஸ் என்பவர் 169 பெற்று முதல் நிலையில் இருக்கிறார்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சியை உலகம் எப்படி மதிப்பிடுகிறது?
உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழான ‘நேச்சர்’, ஒவ்வொரு ஆண்டும் அது வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. 2012-ம் ஆண்டின் அறிக்கை சமீபத்தில் வந்தது. அது தந்திருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றன. ‘நேச்சர்’ இதழ்களில் 2,236 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு, அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சீனாவுக்கு ஆறாவது இடம். இந்தியாவின் இடம் 24. உலகின் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலையும் அது வெளியிட்டிருக்கிறது. 200 நிறுவனங்கள்! ஒன்றுகூட இந்தியாவிலிருந்து இல்லை. சீனத்தின் ஒன்பது நிறுவனங்கள் பட்டியலில் இருக்கின்றன. இதைவிட ஆச்சரியம் தரக்கூடிய தகவல் என்னவென்றால், எதிர்காலத்தில் அறிவியல் துறையில் கவனிக்கப்பட வேண்டியவை என்று ஐந்து நாடுகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவை சீனா, அயர்லாந்து, பிரேசில், கென்யா, மற்றும் சவூதி அரேபியா. இந்தியா, கணக்கிலேயே வரவில்லை. ஆசியாவில்கூட, இந்தியா ஏழாவது இடத்தில் தைவானுக்கும் சிங்கப்பூருக்கும் பின்னால் இருக்கிறது. மொத்த அறிக்கையில் இந்தியாவின் பெயர் இரண்டு இடங்களில்தான் வருகிறது.
வழிதான் என்ன?
இந்த அறிக்கையை வைத்து இந்திய அறிவியலைக் குறைத்து அளவிட முடியாது என்று சொல்வதில் சிறிது உண்மை இருக்கிறது. ஆனால், பிரச்சினைகளையும் குறைத்து அளவிட முடியாது. துடிப்பான பல ஆராய்ச்சியாளர்களிடம் நான் பேசியிருக்கிறேன். ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், இந்திய அறிவியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசு நிறுவனங்களுக்கும், இளைய தலைவர்கள் வேண்டும் என்கிறார்கள் அவர்கள். பெரியவர்கள் வெளியில் நின்று ஆலோசனை வழங்கலாம். ஆனால், நேரடி நிர்வாகத்தில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இளைய விஞ்ஞானிகளின் குரல்கள் அரசுக்குச் சென்றடைய எந்த ஒரு சாதனமும் இல்லை என்பதும் உண்மை. எனவே, வெளிநாடுகளிலிருந்து கனவுகளோடு வந்த பலர், திரும்பச் சென்றுவிட்டனர்.
எதிர்காலம்
சுடர்மிகும் அறிவு படைத்த இளைஞர்களை அறிவியலை நோக்கி வரச் செய்வதே நாம் இன்று செய்ய வேண்டியது. இதை மிக முனைப்போடு செய்துவருபவர் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ராமசாமி அவர்கள். தமிழகத்தைச் சார்ந்தவர். இவரால் கொண்டுவரப்பட்ட ‘இன்ஸ்பையர்’ திட்டம் நாடெங்கும் போற்றப்படுகிறது. 10 வயதில் தொடங்கி 32 வயது வரை அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்காமலே இன்று ஒரு திறமையான மாணவனால் அறிவியலில் உயர்கல்வி பெற முடியும். தமிழகத்தில் இந்தத் திட்டம் அதிகக் கவனிப்புப் பெறாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.
சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி, இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்பும் என்று நம்புகிறேன். குறிப்பாக, தமிழக இளைஞர்களை.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற நால்வரில் மூவர் தமிழர்கள் என்பதை நமது இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

Tuesday, April 9, 2013

இனியும் வேண்டாம் இறக்குமதி வில்லன்கள்!

இனியும் வேண்டாம் இறக்குமதி வில்லன்கள்!

மீபத்தில் நாடாளுமன்றத்தில் 'வேளாண் உயிரி பாதுகாப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக நாடாளுமன்றத்தில் எந்தவொரு மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் அதன் மீதான விவாதங்கள் இருக்கும். ஆனால், அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மௌனவிரதம் அனுஷ்டிப்பதுபோல அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அந்த மசோதாவின் சிறப்பம்சங்கள்குறித்துத் தெரிந்துகொள்ளக்கூட அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி இருக்க முடியுமா? இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் அந்த மசோதாகுறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்!
மரபணு பொறியியல் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் ஒரு நாட்டின் மீது அணுகுண்டு வீசித்தான் போர் தொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உணவு தானியங்கள், களைத் தாவரங்கள் மூலமும் ஒரு நாட்டின் வன மற்றும் வேளாண் வளங்களை அழிக்க முடியும். தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதா மூலம், வேளாண் உயிரி பாதுகாப்பு ஆணையம் கொண்டுவரப்பட்டால் தானியங்கள் தொடங்கி செல்லப் பிராணிகள் வரை தக்க நிபுணர் குழுவால் அலசி ஆராய்ந்த பிறகே இந்தியாவுக்குள் கொண்டு வர முடியும். அந்த வகையில் மிகவும் அவசியமான மசோதா இது. ஆனால், இப்படியான எந்தப் பாதுகாப்பும் இல்லாத காலகட்டத்தில் இந்தியா வுக்குள் ஊடுருவிய சில நச்சு விஷயங்கள் நமக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன தெரியுமா? இதோ அவற்றின் பட்டியல்...
லேன்டினா கேமலா (Lantena camella)
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்கள் நாட்டைப் போலவே சூழலை உருவாக்க, அங்கிருந்து தாவரங்கள், மரங்களைக் கொண்டுவந்து விதைத்தார் கள். அந்த வகையில் அழகுக்காக விதைக்கப்பட்டது லேன்டினா கேமலா. மஞ்சள், ஊதா, வெள்ளை நிறங்களில் பூக்களையும் மிளகு சைஸில் கொத்துக் கொத்தாகக் கரிய நிறப் பழங்களையும் கொண்டது இந்தப் புதர் வகைத் தாவரம். நம் வனங்களின் ஆதாரம் புல்வெளிகள்தான். அந்தப் புல்வெளிகளைப் பற்றிப் படர்ந்து மூடிவிட்டன இந்தப் புதர்ச் செடிகள். இதனால் சூரிய ஒளி, ஆக்சிஜன் தடைபட்டு புல்வெளிகள் அழிந்துவிட்டன. யானையின் 80 சதவிகித ஆகாரம் அந்தப் புற்கள்தான். தனக்கான உணவு ஆதாரம் அழிந்ததாலேயே காட்டைவிட்டு வெளியே வருகின்றன யானைகள். யானை - மனிதன் மோதல் இப்போது உச்சகட்டத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று லேன்டினா கேமலா. யானை மட்டும் அல்ல... புல்வெளிகள் அழிந்ததால் மான்கள் அருகின. மான்கள் சிக்காததால் புலிகளும் குறைந்தன. இப்படி நம் வனத்தின் ஆரோக்கியமான உயிரியல் சங்கிலியின் கண்ணிகளைக் காயப்படுத்தி வருவதில் லேன்டினா கேமலாவின் பங்கு மிக அதிகம். இவற்றை அழிக்க மத்திய அரசு கோடிகளைக் கொட்டியும் பலன் இல்லை.
ஸ்காட்ச் ப்ரூம் (Scotch broom)
அழகுக்காக உள்ளே வந்த இதுவும் ஆங்கிலேயரின் உபயம்தான். இதன் ஆபத்து அறிந்தால் அதிர்ந்துபோவீர்கள். தென்னிந்திய நதிகளின் ஆதாரமே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சோலைக் காடுகள்தான். ஆனால், அந்த சோலைக் காடுகளின் மரங்களை யும், தாவரங்களையும், காட்டை ஒட்டியிருக்கும் புல்வெளிகளையும் பற்றிப் படர்ந்து ஆக்கிரமித்துவிட்டது இந்தப் புதர்ச் செடிகள். சோலைக் காட்டின் தாவரங்கள், மரங்களின் வேர்கள்தான் மழை நீரைப் பஞ்சுபோல உறிஞ்சிக்கொண்டு தேக்கிவைத்து, நதிகளின் நீராதாரமாக இருக்கின்றன. அவற்றை இந்தச் செடிகள் அழித்ததால் நீலகிரி, கூடலூர் பகுதிகளில் கடந்த 40 ஆண்டு களில் 3,000 வற்றாத ஓடைகள் வற்றிவிட்டன. இன்று நம் நதிகள் வற்றிப்போனதுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ஸ்காட்ச் ப்ரூம்!
யூபடோரியம் (Eupatorium)
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வில் இருந்து அழகுக்காக வந்த இந்தத் தாவரத்தின் பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் இருக்கும். இந்தச் செடியும் நம் புல்வெளிகளை ஆக்கிர மித்து அழிக்கும் குணம்கொண்டது.
சீகை மரம் (Wattle)
புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு ஆங்கிலேயர் செய்த முட்டாள்தனம் சீகை மரத்தின் இந்திய ஊடுருவல்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு நம் மலை உச்சிகளில் ஏராளமான புல்வெளிகள் இருந்தன. ஆனால், புல்வெளிகளின் மகத்துவம் அறியாத ஆங்கிலேயர்கள், 'நிலம் சும்மாதானே கிடக்கிறது? மக்களின் விறகு தேவையைப் பூர்த்திசெய்யலாமே!’ என்று வேகமாக வளரும் வேட்டல் மரக்கன்றுகளை நட்டார்கள். அது வேகமாக வளர்வது மட்டுமல்ல... அதைவிட வேகமாகப் பரவும் மரமும்கூட. இதன் காய்கள் வெடித்தால் தரையில் ஒரு சதுர இஞ்ச் அளவில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட விதைகள் இருக் கும். அதன் காரணமாக, வேறு எந்தத் தாவரமும் இவை இருக்கும் பகுதியில் விளையாது. தற்போது இந்த மரத்தின் பட்டைகளைத் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பயன்படுத்துவதால் இதை அழிக்கவும் தயங்குகிறார்கள்.
வேலிக்காத்தான் (Prosopis juli flora)
இதனை டெல்லி முள், சீமைக் கருவேலம் என்றெல்லாம் நம் ஆட்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தியாவில் 1877-ல் விறகு மற்றும் வேலிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது, இன்று தமிழகம் உட்பட நாடு முழுக்கப் பற்றிப் படர்ந்திருக்கும் நச்சு முட்புதராக மாறியிருக்கிறது.  விவசாய நிலங்களைக்கூட விட்டுவைக்காமல் சமவெளி எங்கும் பரவிவிட்ட இந்த செடிகளின் வேர்கள் நம் மண்ணில் சுமார் 50 அடி ஆழம் வரை ஊடுருவிவிட்டன. அதனால், செடிகளை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் வளர்கின்றன. இதை அழிக்க முடியாமல் தடுமாறுகிறது அரசு. இந்தச் செடிகளால் நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்படுவதுடன் சுற்றுவட்டாரத்தில் வேறு எந்தச் செடியையும் வளராமல் தடுக்கிறது இதன் நச்சுத் தன்மை. வறட்சிக் காலத்தில் பசி தாங்கா மல் வனத்தில் மான்களும் யானைகளும் ஊருக் குள் கால்நடைகளும் இதனை உண்டு இறக் கின்றன!
பார்த்தீனியம் (Parthenium)
பலரும் வேலிக்காத்தானைப் பார்த்தீனியம் என்று அழைக்கிறார்கள். அது வேறு... இது வேறு. நட்சத்திர வடிவிலான வெள்ளை நிறப் பூக்களைக்கொண்ட தாவரம் இது. 1952-ல் நமது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக அமெரிக்காவில் இருந்து ஏராளமான அளவில் கோதுமையை இறக்குமதி செய்தோம். அவற்றுடன் தவறுதலாக வந்து சேர்ந்த விதைகள் இவை. முதன்முதலில் பூனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தாவரம், இன்று நாடு முழுவதும் அழிக்க முடியாத நச்சுச் செடியாகப் பரவிவிட்டது. முன்பு நாயுருவி, முடக்கத்தான், கீழாநெல்லி, நொச்சி என ஏராளமான மூலிகைத் தாவரங்கள் தமிழகம் முழுவதும் தானாக வளர்ந்துகிடந்தன. வீட்டில் யாருக்காவது உடல் நலக்குறைவு எனில், நம் பாட்டிமார்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் மூலிகையைப் பறித்தே நோயை விரட்டினார்கள். அந்த மூலிகைத் தாவரங்களை எல்லாம் அழித்தது, இந்தப் பார்த்தீனியம்!
ஆகாயத் தாமரை (Water hyacinth)
அமேசான் காடுகளைப் பூர்வீகமாகக்கொண்ட இந்தச் செடி இன்று காவிரி, தாமிரபரணி உட்பட தமிழகத்தின் பெரும்பான்மை நீர்ப் பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது. ஒரு நீர்நிலையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஆற்றல் இந்த 'அழகுச் செடி’க்கு உண்டு. இவற்றின் இலைகளின் வழியே நீராவிப்போக்கு அதிகம் என்பதால் நீர்நிலையை விரைவில் ஆவியாக்கி காய்ந்து போகச் செய்துவிடும். கொசுக்கள் பல்கிப் பெருக ஊக்குவிப்பதுடன் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளைத் தன் வேர்க் கால்களில் சிக்கி இறக்கச் செய்யும் வல்லமையும் உண்டு இந்தச் செடிகளுக்கு!''
கேட் ஃபிஷ் (Cat fish)
உணவுத் தேவைக்காக இறக்குமதி செய்த இந்த மீன் உண்ணி வகையைச் சேர்ந்தது. நம் நீர் நிலைகளில் இருந்த அயிலை, அயிரை, கெண்டை, கெளுத்தி என அத்தனையையும் கபளீகரம் செய்துவிட்டது இந்த வேட்டை மீன். மொத்த மீன்களும் அழிந்து இவை மட்டுமே பல்கிப் பெருகியதால், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இதை வளர்க்கத் தடை செய்துள்ளது!
விரைவில் வேண்டும் ஆணையம்!
இந்த ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுள் ஒன்று கோவையைச் சேர்ந்த ஓசை. அதன் தலைவரான காளிதாசனிடம் பேசினேன். ''ஆணையம் செயல்படத் தொடங்கினால் களைச் செடிகள் மட்டும் அல்ல... நாட்டுக் குப் பேரழிவுகளை ஏற்படுத்தும் அழிவுச் சக்தி நுண்ணுயிர்களும் உள்ளே நுழைய முடியாது. அவ்வளவு கடுமையான விதிமுறைகளை ஆணையம் வகுத்துத் தயாராக வைத்துள்ளது. எந்த ஓர் இடத்தையும் ஒற்றை உயிரினம் ஆக்கிர மிக்கக் கூடாது. எந்த ஓர் உயிரினமும் அதிகரித் தாலும் ஆபத்து... குறைந்தாலும் ஆபத்து. ஆந்தை, பாம்பு குறைந்தால் எலிகள் பெருகும். தவளை, தும்பி குறைந்தால் கொசுக்கள் பெருகும். வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப சமநிலைப்படுத்தும் தன்மையைக் கொண்டது இயற்கை. மனிதன்தான் தனது பேராசைக்காக அவற்றைச் சிதைக்கிறான். ஒரு தாவரமும் சரி... ஓர் உயிரினமும் சரி... அதற்குரிய இடங்களில் இருக்கும்போது மட்டுமே அது பயனுள்ளதாக அமையும். இடம் மாறினால், அது ஆபத்தில் முடியும். சமீபத்தைய உதாரணம் ஈமு. பணப் பயிர்களாகப் புகுத்தப் பட்ட தேயிலையும் சில்வர் ஓக் மற்றும் யூகலிப் டஸ் மரங்களும் நம் வனத்தை அழித்துவருவது இதற்கான கண்கண்ட சாட்சி...'' என்கிறார்.
சீக்கிரமே உருவாகட்டும் வேளாண் உயிரி பாதுகாப்பு ஆணையம்!
source:vikatan

Wednesday, July 27, 2011

Cairo’s ‘Apocalypse Horse’ creates ‘net buzz






The Egypt uprising has made all the headlines and maintained the interest of our web readers. No surprise then that our story Clashes resume in Cairo was our most viewed on the day it was published. One week later though and it is still our most sought-after story. Not just on our website but on YouTube, where it appears under the title  Fourth Horseman, death.

We had to watch the video to get to the bottom of its remarkable popularity. And there it was, at 1’17” – a pale ghost rider appears to have joined the uprising.

A quick look at similar videos on YouTube confirmed that it was not just euronews who had broadcast the mystery horseman. There were plenty of comments referring to the biblical fourth horse of the Apocalypse. The New Testament tells us that each of the four horses is attributed a colour – white, red, black and pale - and a scourge – conquest, war, famine and death - to bring upon the world.

Everyone has their own interpretation; some believe the fourth horse really has come to bring death upon the land; others point to beings from another planet; most seem to think it’s just a reflection in a window.

We checked the origin of the video and it was provided to us – and to many other media outlets – by REUTERS. So while the footage may have caused a stir, be assured there is no horseplay on our behalf. 
Copyright © 2011 euronews