இனியும் வேண்டாம் இறக்குமதி வில்லன்கள்!
யூபடோரியம் (Eupatorium)
கேட் ஃபிஷ் (Cat fish)
சமீபத்தில்
நாடாளுமன்றத்தில் 'வேளாண் உயிரி பாதுகாப்பு ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா
ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக நாடாளுமன்றத்தில் எந்தவொரு மசோதா
தாக்கல் செய்யப்பட்டாலும் அதன் மீதான விவாதங்கள் இருக்கும். ஆனால், அந்த
மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்
மௌனவிரதம் அனுஷ்டிப்பதுபோல அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அந்த மசோதாவின்
சிறப்பம்சங்கள்குறித்துத் தெரிந்துகொள்ளக்கூட அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி இருக்க முடியுமா?
இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் அந்த மசோதாகுறித்து அறிந்துகொள்ள
வேண்டியது அவசியம்!
மரபணு பொறியியல் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் ஒரு
நாட்டின் மீது அணுகுண்டு வீசித்தான் போர் தொடுக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லை. உணவு தானியங்கள், களைத் தாவரங்கள் மூலமும் ஒரு நாட்டின் வன மற்றும்
வேளாண் வளங்களை அழிக்க முடியும். தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டிருக்கும் மசோதா மூலம், வேளாண் உயிரி பாதுகாப்பு ஆணையம்
கொண்டுவரப்பட்டால் தானியங்கள் தொடங்கி செல்லப் பிராணிகள் வரை தக்க நிபுணர்
குழுவால் அலசி ஆராய்ந்த பிறகே இந்தியாவுக்குள் கொண்டு வர முடியும். அந்த
வகையில் மிகவும் அவசியமான மசோதா இது. ஆனால், இப்படியான எந்தப் பாதுகாப்பும்
இல்லாத காலகட்டத்தில் இந்தியா வுக்குள் ஊடுருவிய சில நச்சு விஷயங்கள்
நமக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன தெரியுமா? இதோ அவற்றின்
பட்டியல்...

லேன்டினா கேமலா (Lantena camella)
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்கள்
நாட்டைப் போலவே சூழலை உருவாக்க, அங்கிருந்து தாவரங்கள், மரங்களைக்
கொண்டுவந்து விதைத்தார் கள். அந்த வகையில் அழகுக்காக விதைக்கப்பட்டது
லேன்டினா கேமலா. மஞ்சள், ஊதா, வெள்ளை நிறங்களில் பூக்களையும் மிளகு சைஸில்
கொத்துக் கொத்தாகக் கரிய நிறப் பழங்களையும் கொண்டது இந்தப் புதர் வகைத்
தாவரம். நம் வனங்களின் ஆதாரம் புல்வெளிகள்தான். அந்தப் புல்வெளிகளைப்
பற்றிப் படர்ந்து மூடிவிட்டன இந்தப் புதர்ச் செடிகள். இதனால் சூரிய ஒளி,
ஆக்சிஜன் தடைபட்டு புல்வெளிகள் அழிந்துவிட்டன. யானையின் 80 சதவிகித ஆகாரம்
அந்தப் புற்கள்தான். தனக்கான உணவு ஆதாரம் அழிந்ததாலேயே காட்டைவிட்டு வெளியே
வருகின்றன யானைகள். யானை - மனிதன் மோதல் இப்போது உச்சகட்டத்தில்
இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று லேன்டினா கேமலா. யானை மட்டும்
அல்ல... புல்வெளிகள் அழிந்ததால் மான்கள் அருகின. மான்கள் சிக்காததால்
புலிகளும் குறைந்தன. இப்படி நம் வனத்தின் ஆரோக்கியமான உயிரியல் சங்கிலியின்
கண்ணிகளைக் காயப்படுத்தி வருவதில் லேன்டினா கேமலாவின் பங்கு மிக அதிகம்.
இவற்றை அழிக்க மத்திய அரசு கோடிகளைக் கொட்டியும் பலன் இல்லை.
ஸ்காட்ச் ப்ரூம் (Scotch broom)
அழகுக்காக உள்ளே வந்த இதுவும் ஆங்கிலேயரின் உபயம்தான்.
இதன் ஆபத்து அறிந்தால் அதிர்ந்துபோவீர்கள். தென்னிந்திய நதிகளின் ஆதாரமே
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சோலைக் காடுகள்தான். ஆனால், அந்த சோலைக்
காடுகளின் மரங்களை யும், தாவரங்களையும், காட்டை ஒட்டியிருக்கும்
புல்வெளிகளையும் பற்றிப் படர்ந்து ஆக்கிரமித்துவிட்டது இந்தப் புதர்ச்
செடிகள். சோலைக் காட்டின் தாவரங்கள், மரங்களின் வேர்கள்தான் மழை நீரைப்
பஞ்சுபோல உறிஞ்சிக்கொண்டு தேக்கிவைத்து, நதிகளின் நீராதாரமாக இருக்கின்றன.
அவற்றை இந்தச் செடிகள் அழித்ததால் நீலகிரி, கூடலூர் பகுதிகளில் கடந்த 40
ஆண்டு களில் 3,000 வற்றாத ஓடைகள் வற்றிவிட்டன. இன்று நம் நதிகள்
வற்றிப்போனதுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ஸ்காட்ச் ப்ரூம்!

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வில் இருந்து அழகுக்காக
வந்த இந்தத் தாவரத்தின் பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் இருக்கும்.
இந்தச் செடியும் நம் புல்வெளிகளை ஆக்கிர மித்து அழிக்கும் குணம்கொண்டது.
சீகை மரம் (Wattle)
புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு ஆங்கிலேயர்
செய்த முட்டாள்தனம் சீகை மரத்தின் இந்திய ஊடுருவல்கள். 100 ஆண்டுகளுக்கு
முன்பு நம் மலை உச்சிகளில் ஏராளமான புல்வெளிகள் இருந்தன. ஆனால்,
புல்வெளிகளின் மகத்துவம் அறியாத ஆங்கிலேயர்கள், 'நிலம் சும்மாதானே
கிடக்கிறது? மக்களின் விறகு தேவையைப் பூர்த்திசெய்யலாமே!’ என்று வேகமாக
வளரும் வேட்டல் மரக்கன்றுகளை நட்டார்கள். அது வேகமாக வளர்வது மட்டுமல்ல...
அதைவிட வேகமாகப் பரவும் மரமும்கூட. இதன் காய்கள் வெடித்தால் தரையில் ஒரு
சதுர இஞ்ச் அளவில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட விதைகள் இருக் கும். அதன்
காரணமாக, வேறு எந்தத் தாவரமும் இவை இருக்கும் பகுதியில் விளையாது. தற்போது
இந்த மரத்தின் பட்டைகளைத் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பயன்படுத்துவதால்
இதை அழிக்கவும் தயங்குகிறார்கள்.
வேலிக்காத்தான் (Prosopis juli flora)
இதனை டெல்லி முள், சீமைக் கருவேலம் என்றெல்லாம் நம்
ஆட்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தியாவில் 1877-ல் விறகு மற்றும்
வேலிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது, இன்று தமிழகம் உட்பட நாடு முழுக்கப்
பற்றிப் படர்ந்திருக்கும் நச்சு முட்புதராக மாறியிருக்கிறது. விவசாய
நிலங்களைக்கூட விட்டுவைக்காமல் சமவெளி எங்கும் பரவிவிட்ட இந்த செடிகளின்
வேர்கள் நம் மண்ணில் சுமார் 50 அடி ஆழம் வரை ஊடுருவிவிட்டன. அதனால்,
செடிகளை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் வளர்கின்றன. இதை அழிக்க முடியாமல்
தடுமாறுகிறது அரசு. இந்தச் செடிகளால் நிலத்தடி நீர் முற்றிலும்
உறிஞ்சப்படுவதுடன் சுற்றுவட்டாரத்தில் வேறு எந்தச் செடியையும் வளராமல்
தடுக்கிறது இதன் நச்சுத் தன்மை. வறட்சிக் காலத்தில் பசி தாங்கா மல்
வனத்தில் மான்களும் யானைகளும் ஊருக் குள் கால்நடைகளும் இதனை உண்டு இறக்
கின்றன!
பார்த்தீனியம் (Parthenium)
பலரும் வேலிக்காத்தானைப் பார்த்தீனியம் என்று
அழைக்கிறார்கள். அது வேறு... இது வேறு. நட்சத்திர வடிவிலான வெள்ளை நிறப்
பூக்களைக்கொண்ட தாவரம் இது. 1952-ல் நமது உணவுத் தேவையைப்
பூர்த்திசெய்வதற்காக அமெரிக்காவில் இருந்து ஏராளமான அளவில் கோதுமையை
இறக்குமதி செய்தோம். அவற்றுடன் தவறுதலாக வந்து சேர்ந்த விதைகள் இவை.
முதன்முதலில் பூனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தாவரம், இன்று நாடு
முழுவதும் அழிக்க முடியாத நச்சுச் செடியாகப் பரவிவிட்டது. முன்பு நாயுருவி,
முடக்கத்தான், கீழாநெல்லி, நொச்சி என ஏராளமான மூலிகைத் தாவரங்கள் தமிழகம்
முழுவதும் தானாக வளர்ந்துகிடந்தன. வீட்டில் யாருக்காவது உடல் நலக்குறைவு
எனில், நம் பாட்டிமார்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் மூலிகையைப் பறித்தே
நோயை விரட்டினார்கள். அந்த மூலிகைத் தாவரங்களை எல்லாம் அழித்தது, இந்தப்
பார்த்தீனியம்!
ஆகாயத் தாமரை (Water hyacinth)
அமேசான் காடுகளைப் பூர்வீகமாகக்கொண்ட இந்தச் செடி இன்று
காவிரி, தாமிரபரணி உட்பட தமிழகத்தின் பெரும்பான்மை நீர்ப் பரப்புகளை
ஆக்கிரமித்திருக்கிறது. ஒரு நீர்நிலையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஆற்றல்
இந்த 'அழகுச் செடி’க்கு உண்டு. இவற்றின் இலைகளின் வழியே நீராவிப்போக்கு
அதிகம் என்பதால் நீர்நிலையை விரைவில் ஆவியாக்கி காய்ந்து போகச்
செய்துவிடும். கொசுக்கள் பல்கிப் பெருக ஊக்குவிப்பதுடன் தண்ணீர் குடிக்க
வரும் கால்நடைகளைத் தன் வேர்க் கால்களில் சிக்கி இறக்கச் செய்யும்
வல்லமையும் உண்டு இந்தச் செடிகளுக்கு!''

உணவுத் தேவைக்காக இறக்குமதி செய்த இந்த மீன் உண்ணி
வகையைச் சேர்ந்தது. நம் நீர் நிலைகளில் இருந்த அயிலை, அயிரை, கெண்டை,
கெளுத்தி என அத்தனையையும் கபளீகரம் செய்துவிட்டது இந்த வேட்டை மீன். மொத்த
மீன்களும் அழிந்து இவை மட்டுமே பல்கிப் பெருகியதால், சில ஆண்டுகளுக்கு
முன்பு தமிழக அரசு இதை வளர்க்கத் தடை செய்துள்ளது!
விரைவில் வேண்டும் ஆணையம்!
இந்த ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக
வலியுறுத்தி வந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுள் ஒன்று கோவையைச் சேர்ந்த ஓசை.
அதன் தலைவரான காளிதாசனிடம் பேசினேன். ''ஆணையம் செயல்படத் தொடங்கினால் களைச்
செடிகள் மட்டும் அல்ல... நாட்டுக் குப் பேரழிவுகளை ஏற்படுத்தும் அழிவுச்
சக்தி நுண்ணுயிர்களும் உள்ளே நுழைய முடியாது. அவ்வளவு கடுமையான விதிமுறைகளை
ஆணையம் வகுத்துத் தயாராக வைத்துள்ளது. எந்த ஓர் இடத்தையும் ஒற்றை உயிரினம்
ஆக்கிர மிக்கக் கூடாது. எந்த ஓர் உயிரினமும் அதிகரித் தாலும் ஆபத்து...
குறைந்தாலும் ஆபத்து. ஆந்தை, பாம்பு குறைந்தால் எலிகள் பெருகும். தவளை,
தும்பி குறைந்தால் கொசுக்கள் பெருகும். வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப
சமநிலைப்படுத்தும் தன்மையைக் கொண்டது இயற்கை. மனிதன்தான் தனது பேராசைக்காக
அவற்றைச் சிதைக்கிறான். ஒரு தாவரமும் சரி... ஓர் உயிரினமும் சரி...
அதற்குரிய இடங்களில் இருக்கும்போது மட்டுமே அது பயனுள்ளதாக அமையும். இடம்
மாறினால், அது ஆபத்தில் முடியும். சமீபத்தைய உதாரணம் ஈமு. பணப் பயிர்களாகப்
புகுத்தப் பட்ட தேயிலையும் சில்வர் ஓக் மற்றும் யூகலிப் டஸ் மரங்களும் நம்
வனத்தை அழித்துவருவது இதற்கான கண்கண்ட சாட்சி...'' என்கிறார்.
சீக்கிரமே உருவாகட்டும் வேளாண் உயிரி பாதுகாப்பு ஆணையம்!
source:vikatan